Friday, April 1, 2011

இன்டர்நெட்! ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்!

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.

இது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.

1. முன்பணம் கட்டாதீர்கள்:

ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது, கடன் தீர்க்கப் பணம் தருகிறோம், பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம், இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, தூண்டிலிட்டு, பின்னர் அதற்கு சரி என்கையில், முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும். இதனை மிக அழகாக நியாயப்படுத்தியும் செய்தி தரப்படும்.

பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான். அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை, அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப் படுத்திவிடுவதே, நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.

2. அக்கவுண்ட் எண் தரலாமா?

மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் எண், நெட்பேங்கிங் பாஸ்வேர்ட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். அக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டால், உங்கள் அக்கவுண்ட் அவ்வளவுதான்.

பைசா கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் கார்டை மட்டுமே பயன்படுத்தவும்.

3. தானாக தனி நபர் தகவல் தரலாமா?

ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் தந்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் தந்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.

4.போலி பேஸ்புக் செய்திகள்:


பேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட, உங்கள் அக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார், நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் அக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.

5. வீடு தேடி வரும் பொருட்களை இணைய தளத்தில் வாங்க வேண்டாம்:


இணைய தள வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பலர் இதில் பொருட்களை வாங்கிப் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், நாம் நாள்தோறும் நம் வீட்டு வாசலில் விற்பனை செய்யப்படும், அடுத்த கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, இணைய தளத்தில் வாங்க வேண்டுமா? விலை குறைவாகக் காட்டிப் பின்னர், அனுப்பும் செலவு, செயல்படும் செலவு, இணைய வரி எனப் பல தலைப்புகளில் காசைக் கறந்துவிடுவார்கள்.

இந்த ஐந்து வழிமுறைகளையும் கையாண்டால் ஓரளவிற்கு நாம் ஏமாறுவதை நாமே தவிர்க்கலாம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Free Web Hosting